அறுவை பூமியில் அன்பு பாலம் - சுப்புலெட்சுமி ஜபிஎஸ் ஆக்ஷன் கல..கல...

"நாள்தோறும் மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வடசென்னையில் உள்ள எங்கள் வீட்டுக்கு திரும்பும் போது திக்..திக்.. என்று இருக்கும். எந்த சந்தில் இருந்து ரவுடிகள் அரிவாள்களை வீசுவார்கள் என்ற பயத்திலேயே வீட்டை நோக்கி பேச்சு, மூச்சு இல்லாமல் தத்தி தத்தி நடை போடுவோம். அந்த நேரங்களில் எல்லாம் போலீஸ் ரோந்து வேனை கண்டால், கடவுளையே நேரில் கண்டதைப் போல நிம்மதியாக இருக்கும். புதுவண்ணாரப்பேட்டைக்கு டெபுடி கமிஷனராக துணிச்சலான அதிகாரிகள் நியமிக்கும் போதுதான், ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ரவுடிகள் தங்கள் வாலை சுருட்டிக் கொள்வார்கள். இப்படிபட்ட நேரத்தில் பெண் அதிகாரி எங்களுக்கு உயரதிகாரியாக வந்துள்ளார் என்ற செய்தி கிடைத்தபோதே, அச்சவுணர்வு ஏற்பட்டது. இந்த ரவுடி பசங்க, அந்தம்மாவை என்ன பாடுபடுத்தப் போறாங்களோ என பயப்பட்டோம். ஆனால், பதவியேத்த முதல்நாளில் இருந்தே, அதிகாரத்தை கையில் எடுக்காமல், மனித வாழ்விற்கே மகத்துவமான அன்பு எனும் குணத்தை கையில் எடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அமைதி பூங்காவாக வடசென்னையை மாற்றி வருகிறார். எந்த நேரமும் பெண் குழந்தைகள் பயமின்றி வெளியே போகலாம் என்றளவுக்கு வடசென்னை புத்தம் புதிய பூமியாக மாறியிருக்கிறது.